வீணாகும் நேரம்

ஆண்கள் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை

முஃப்தி, Mitwalli Steel Products Co., Jeddah

 

பொன்னை விட மேலானது
"காலம் பொன் போன்றது" என்பது எல்லாரும் அறிந்ததொரு பழமொழி. ஆனால் காலம் பொன்னைவிட மேலானது என்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்றும் சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாம்தான்.

நேரத்தை விழுங்கும் பொழுதுபோக்குகளை பட்டியலிட்டால் இந்த கட்டுரை போதாது. அதில் சினிமா, இசை, புறம் பேசுதல், பாலின சாட்டிங், வீடியோ மற்றும் கம்ப்யூட்டர் கேம்ஸ் போன்றவற்றை முக்கியானவையாக குறிப்பிடலாம். காதல் தெய்வீகமானது பிறகு காதலுக்கு கண்ணில்லை என பரிணமித்துத் தற்போது காதல் பிசாசு என்று வளர்ந்துவிட்டதால், சினிமாவின் தீமை, நேரத்தை போக்குவது மட்டுமல்லாமல் ஒழுக்கக் கேட்டுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

கதாநாயகியை கடத்திச் செல்லும் வில்லனின் காரை, தனது காலில் கட்டிய கயிற்றைக் கொண்டு இழுத்துப் பிடிக்கும் பலசாலி(?) ஹீரோக்களிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொண்டோம் என்று தெரியவில்லை. வளர்ந்த தொழில் நுட்பத்தை, நேரத்தை போக்க பயன்படுத்துகிறோமே தவிர, இறைப்பொருத்தத்துக்காகவோ அல்லது அறிவு வளர்ச்சிக்காகவோ அல்ல.

அதிகமாக இணையத்தில் தேடப்படுவது ஆபாசம் எனவும் இரண்டாவது இசை எனவும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. நேரங்கள் வீணடிக்கப்படுவதை கண்காணிப்பதற்காகவும் அதனை பயனுள்ள வழியில் செலவு செய்வதற்காகவும் தனி அமைச்சரை ஃபிரான்ஸ் நியமித்ததை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

நமது நாட்டில் மாணவர்கள் வீணான அரட்டை அடிப்பதிலும், பெரியவர்கள் டீ கடை வாசல்களிலும், வாலிபர்கள் சினிமா கொட்டகைகளிலும் பொழுதை கழிக்கவே விரும்புகிறார்கள். வீட்டுப்பெண்கள் தொலைகாட்சித் தொடர்களில் நேரத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களின் மரத்தடி சீட்டாட்ட மன்றங்கள் தற்போது பெண்கள் கல்லூரி விஷிட்டிங், ஈவ் டீசிங் என பரிணாமம் அடைந்து பாலினக்கருத்து பரிமாற்று மன்றங்கள் (Sex Chatting) வரை வளர்ந்திருக்கிறது.

து இப்படி இருக்க, செல்வம் கொழிக்கும் அரபு நாடுகளின் நிலைமை சற்று வித்தியாசமானது.

இவர்களில் 60 சதவீதம் தொலைக்காட்சி பார்ப்பதிலும் 28 சதவீதம் பயனற்ற வேலைகளிலும் ஈடுபட்டு 2 அல்லது 3 மணிக்குத்தான் தூங்குவதற்கே செல்லுகிறார்கள். இளைஞர்கள் கார்களில் உல்லாசமாக சுற்றுவதிலும், இளம்பெண்கள் தினமும் 2 அல்லது 3 மணிநேரம் தொலைபேசியிலும் நேரத்தைக் கழிக்கிறார்கள்(1).

முரண்பாடான பதில்
"என்ன பாய்! சினிமா பார்க்கிறீங்கலாமே" என்று கேட்டால் "சும்மா ஒரு டைம் பாஸ்தான்" என்றும் அதே நபரிடம் அடுத்த கேள்வியாக "மார்க்கத்தைப் பற்றி சிறிது தெரிந்துக் கொள்ளக்கூடாதா?" என கேட்டால் "எங்க பாய் டைம் இருக்கு" என்பார்கள். இது சினிமாவுக்கு மட்டும் கொடுக்கப்படும் பதில் அல்ல. வேறு பொழுதுபோக்கு என வைத்துக்கொண்டாலும் அவர்களின் பதில் இதுவாகத்தான் இருக்கும்.

ஒருநாளைக்கு மட்டும் என்று புதிய பொழுது போக்குகளில் அறிமுகமாகி, பிறகு அதற்கு அடிமையாகி விடுவதால் இறைவணக்கம், சமுதாயப்பணி, உடற்பயிற்சி போன்றவை இவர்களிடம் எடுபடுவதில்லை.

நேரத்தின் முக்கியத்துவம்
இரண்டு பாக்கியங்களில் பெரும்பாலான மக்கள் அலட்சியமாய் இருக்கின்றனர். அவை ஆரோக்கியமும் ஓய்வுமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) நூல்: புகாரி (6412)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ஏழு விஷயங்களுக்கு முன், நல் அமல்களை கொண்டு முந்திக்கொள்ளுங்கள். 1.மறதியில் ஆழ்த்தும் வறுமை 2.அநீதி இழைக்கத் தூண்டும் செல்வம் 3.உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய் 4.சொல்லை பலவீனப்படுத்திவிடும் முதுமை 5.விரைந்து வரும் மரணம் 6.தஜ்ஜால் (அவனது வருகை) அவன் எதிர்பார்க்கப்படும் மறைவான விஷயங்களில் கெட்டவன் 7.இறுதித்தீர்ப்பு நாள் (அது) மிகக்கடினமானதும் மிகக் கசப்பானதுமாகும். அறிவிப்பவர்: அபூஹரைரா(ரலி) நூல்: திர்மிதி

வாழ்நாளை எப்படிக் கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதைச் செயல்படுத்தினான்? என ஐந்து விஷயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: திர்மிதி (2531)

அல்-அஸ்ர் அத்தியாயத்தின் கருத்துச்செறிவை உணர்ந்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள், மனித சமுதாயத்திற்கு இது ஒன்றே போதுமானதாகும் என்றார்கள்.

காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத்தவிர. (அல்குர்ஆன் 103:1-3)

உயிர்வாழ அவசியமான உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைக்காக பொருள் சம்பாதிப்பது அவசியமாகின்றது. மேலும் தொழுகை, உறக்கும் இதுபோன்ற அவசியமான விஷயங்களுக்கான நேரம் போக மற்ற நேரங்களை பயனுள்ளதாக கழிக்க வழிகளுக்கு பஞ்சமில்லை என்றாலும், நம் சமுதாயம் தஞ்சம் அடைந்திருப்பது பொழுது போக்குகளில் என்பதால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் நேரத்தை ஒதுக்கி கவனம் செலுத்த வேண்டிய துறைகள் இரண்டு: அ)கல்வி ஆ) செய்தி ஊடகம் (Media).

கல்வி
இன்று பயனுள்ள அறிவை போதிக்கவல்ல எத்தனையோ பயிற்சி நிலையங்களும், நிகழ்ச்சிகளும், இணையதளங்களும், நூலகங்களும், சி.டி.க்களும் வந்துவிட்டன. இதனையெல்லாம் படிப்பதற்கு நமக்கேது நேரம் என்கிறோம். அதனை உருவாக்க அவர்களால் நேரம் ஒதுக்க முடியும் என்றால், அதனை பயன்படுத்த நம்மால் ஏன் நேரம் ஒதுக்க முடியவில்லை? அப்படியென்றால் நேரத்தை எந்த வகையில் செலவிடுகிறோம் என்று சிந்தித்துப் பார்த்தோமா?

விறகு வெட்டியாக வேலைக்கு அமர்ந்தவனிடம் கோடாறியை கொடுத்து அனுப்பினார் முதலாளி. முதல்நாள் 50 மரங்களை வெட்டி எடுத்து வந்தான். அவனுடைய கடும் உழைப்பை பாராட்டிய முதலாளி அவனுக்கு கைநிறைய சம்பளத்தை கொடுத்தனுப்பினார். மறுநாள் விறகு வெட்டச் சென்றவனுக்கு 40 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது. கடுமையாக உழைத்தும் கூட, அடுத்தடுத்த நாள் எண்ணிக்கை சரிய ஆரம்பித்ததன் காரணம் புரியாமல் குழம்பினான். கோடாறியை தீட்டினாயா? என்று முதலாளி கேட்ட பிறகே, அதனைக் கூர்தீட்ட நேரம் ஒதுக்காததை உணர்ந்தான்.

ஒவ்வொருவரும் தமது அறிவை பட்டை தீட்டிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அலட்சியம் செய்தால் அறிவுக்கூர்மை மழுங்கிவிடும் என்பதை மேற்சொன்ன கதையில் இருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

பரபரப்பான எத்தனையோ எழுத்தாளர்கள் படிக்க நேரம் ஒதுக்கவே செய்கிறார்கள். விருது பெற்ற மாற்றுமத எழுத்தாளர்(2) ஒருவர் நபிமொழிக் களஞ்சியமான புகாரியின் ஏழு தொகுதிகளையும் வாங்கி 300 பக்கம் வரை படித்துவிட்டு அதற்கான குறிப்புகளையும் எழுதிவைத்திருக்கிறார். பிறகு வந்த பரபரப்பான சூழ்நிலையினால் படிப்பதை தொடரமுடியாமல் போனதால் மனம் வருந்தி அதனை படிக்காத புத்தகங்கள் என்ற பட்டியலில் சேர்த்திருக்கிறார்.

நம்மவர்களுக்கு, புரட்டிப்பார்த்தாலே போதும் அது படித்த புத்தகங்கள் பட்டியலில் இடம் பெற்றுவிடும் என்றால் அது மிகையாகாது. படிக்காமல், கேட்காமல் விஷயங்களை தெளிவாக புரிந்துக்கொள்ள முடியாது என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதனால்தான் இறைவன் இக்ர (படி) என்ற வார்த்தையை குர்ஆனில் முதன்முதலாக அருளியிருக்கிறான். ஆகவே எந்த ஒரு பயனுள்ள கல்வியை கற்பதற்கும் நேரத்தை ஒதுக்கினால்தான் முடியும்.

செய்தி ஊடகம் (Media)
பயனுள்ள அறிவைப் பரப்ப எத்தனையோ வழிகள் உலகத்தில் இருக்கின்றன. இன்று ஊடகத்தின் வளர்ச்சி, உச்சியை அடைந்துவிட்டாலும் எல்லாருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது. சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கு கொண்டுபோய் சேர்க்க முடியும். உதாரணமாக பணம் கொடுத்துதான் இணையதளம் (Website) அமைக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டு, வலைப்பதிவு (Weblog), மன்றங்கள் (Forum) மூலமாக இலவசமாகவும் எளிதாகவும் செய்திகளைப் பரப்பும் நிலை வந்திருக்கிறது.

பர்தா பாதுகாப்பு என்கிறது இஸ்லாம். இல்லை பழமைவாதம் என்கிறார்கள் எதிரிகள். நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருந்தால் ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப்போரில் வாள் வீசுவது யார்தானாம்? சற்று சிந்தனை செய்யவேண்டாமா? இன்று ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கெதிரான அவர்கள் செய்யும் பனிப்போரில் (Cold war) ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றால் யார் காரணம்? நாமல்லவா நண்பர்களே! குட்ட குட்ட குனிபவன் முட்டாளல்லவா?.

ஆகவே எழுத்துப்பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்கி எழுத்தாளராக உயர்ந்து, இஸ்லாத்திப் பற்றி தவறாகப் பரப்பப்படும் மீடியாவின் கருத்துக்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அதற்கு இன்றியமையாதது ஆர்வமும் நேரம் ஒதுக்குவதும் ஆகும்.

எழுத்துகளின் மூலம் கல்வியை பிறருக்கு எடுத்துச்செல்வது எளிது.
1.யோசித்து எழுத முடியும்
2.எழுதியதை பலதடவை சரிபார்க்க முடியும்
3.புதிய யோசனைகளை சேர்க்க முடியும்
4.பதியவைப்பதின் மூலம் பாதுகாத்துக்கொள்ளலாம்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை வெல்வதோடு மட்டுமல்லாது, அனைத்து ஊடகத்தின் வழியாகவும் பயனுள்ள கல்வியை அமானிதமாக எண்ணி பரப்புவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இது அனைவரின் மீதும் கடமை என்பதை மறந்துவிடவேண்டாம்.

உபரியான வணக்கங்கள்
1.இரவுத்தொழுகை 2.திக்ர் 3.குர்ஆன் ஓதுதல் 4.பிரார்த்தனை புரிதல் போன்ற உபரியான வணக்கங்களுக்காக குறைந்த பட்சம் 30 நிமிடமாவது தினந்தோறும் ஒதுக்க வேண்டும்.

உடற்பயிற்சி
கால்பந்து, பேட்மேட்டன், ஷெட்டில்கார்க் போன்ற விளையாட்டுகளும் உடற்பயிற்சிதான். நபி(ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா(ரலி) அவர்களுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று குறைப்பட்டுக் கொள்பவர்கள், போகவேண்டிய அருகாமை இடங்களுக்கு சைக்கிளில் அல்லது நடந்து செல்லலாமல்லவா? அல்லது அடுக்குமாடி குடியிருப்புக்கு லிஃப்டை தவிர்த்துவிட்டு படியேறி செல்லலாமல்லவா? அதுவும் உடற்பயிற்சிதான்.

சமுதாயப்பணி
நம் மூளையில் உள்ள 140 பில்லியன் செல்களும் தாமாகவே ஒன்றுக்கொன்று தொடர்புக்கொண்டு நமது சிந்தனைகளை அதிகரிக்க உதவுகின்றதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். நீங்கள் சிந்திக்கும்போது செல்களின் அளவு அதிகரிக்கின்றது, சிந்தனைக்கு நேரம் ஒதுக்காதபோது அவைகள் அழிந்துவிடுகின்றன. மனித சமுதாய முன்னேற்றத்திற்காக நாம் ஏன் சிந்திக்கக்கூடாது?

சிந்தனையோடு நின்றுவிடாமல் நேரம் ஒதுக்கி செயல்படுத்துங்கள். சமுதாயப்பணி எதுவாகவும் இருக்கலாம். அதன் மூலம் சமுதாயத்துக்கு நன்மைகள் கிடைக்க வேண்டும் தவிர நம்முடைய புகழுக்காக இருக்கக்கூடாது.

முயற்சியினால் முந்திக்கொண்டவர்கள்
1) இப்னு மஸ்வூத்(ரலி): என்னுடைய அமல்களை அதிகரித்துக் கொள்ளாமல் என்னை கடந்து செல்லும் நாட்களைத்தவிர வேறு எதற்கும் நான் நொந்துக்கொண்டது இல்லை.
2) 16 வயது இளைஞராக இருக்கும் போது உஸாமா பின் ஜைத்(ரலி) அவர்கள் படைத்தளபதி ஆனார்கள். இறைவன் மீது ஆணையாக இதற்கு இவர் முழுத்தகுதிவாய்ந்தவர் என நபி(ஸல்) அவர்களின் சான்றிதழையும் பெற்றிருந்தார்கள்.
3) சஅத் பின் முஆத்(ரலி) 30-ஆம் வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். 37-ஆம் வயதில் மரணித்தார்கள். அவரின் 7 வருட முஸ்லிமான வாழ்க்கைக்காக, அல்லாஹ்வின் அர்ஸ் அவரின் மரணத்திற்காக நடுங்கியது.
4) 10 வயதில் இஸ்லாத்தை ஏற்ற ஜைத் பின் தாபித்(ரலி), 14 வது வயதில் ஹிப்ரு மொழியைக் கற்று நபி(ஸல்) அவர்களின் பிரத்யேக மொழிபெயர்ப்பாளர் ஆனார்கள். 17 வயதில் வஹி எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் நபியவர்களுக்குப்பிறகு குர்ஆனை தொகுத்த குழுவிற்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்கள்.
5) உமர் அல்-முக்தார் அவர்கள் தனது 60-வது வயதில் இத்தாலிய ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு தலைமையேற்று 10 வருடம் படை நடத்தினார்.


நேரத்தை விழுங்கும் நிர்வாக கோளாறு
நேரம் கூர்மையான கத்தியைப் போல, நீ அதனை வெட்டவில்லையென்றால் அது உன்னை வெட்டிவிடும் எனபது முதுமொழி.

உங்கள் நேரத்தை பொன்னானதாக மாற்ற வேண்டுமானால் உங்களுக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி உங்கள் முயற்சி தொடர வேண்டும். இலக்கு இல்லாத வாழ்க்கை என்பதால்தான், Dragging என்றும் Boring என்றும் சிலரால் பதில் சொல்ல முடிகிறது.

தினக்குறிப்பு (Daily Planner) இல்லாமல் வெளிச்செல்வதில்லை என்று நமக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும். இதற்கென கையடக்க கணிப்பொறி (Pocket Pc) அவசியமில்லை. துண்டு பேப்பர் போதுமானது. இதன் மூலம் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவு உள்ளன என்பதை தெளிவாக அறிந்துக்கொள்ள முடியும். நேரமும் மிச்சமாகும்.

நீங்கள் செய்த பணிகளை கீழ்கண்டவாறு அட்டவணை போட்டுப் பாருங்கள்.

நேரம்

வேலை

தேவைப்படும் நேரம்

காலை 6:00 - 7:00

இணையத்தில் செய்தி படிப்பது

30 நிமிடம் மட்டுமே

 

 

 

 

 

 


இப்படி எழுதிப் பார்த்தால் எவ்வளவு நேரம் வீணடித்திருக்கிறோம் என்பது தெரிந்துவிடும்.

திட்டங்களும் எச்சரிக்கைகளும்
1) வீண் பேச்சு பேசும் மக்களிடமிருந்து ஒதுங்கியிருங்கள்.
2) ஓய்வு நேரத்தை முறையாக பயன்படுத்துகிறோமா என்பதில் கவனமாக இருங்கள்.
3) வெளியிடத்திற்கு செல்லும்போது படிக்க வேண்டிய புத்தகங்களையும் எடுத்துச் செல்லுங்கள். வெளியூர் பயணத்தின்போது பயான் கேஸட்கள் எடுத்துச்சென்று பயண நேரத்தில் கேட்டு பயன் அடையலாம்.
4) பேருந்திற்காக மற்றும் டாக்டருக்காக காத்திருக்கும் எந்த நேரத்தையும் வீணாக்காமல் படியுங்கள்.
5) பணிகளின் தரம் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் பயன்படுத்தப்பட்ட நேரங்கள் வீணாகிவிடும். முக்கியப்பணிகளை முதலில் முடித்துவிடுங்கள்.
6) படிப்பதற்கும் எழுதுவதற்கும் நேரப்பற்றாக்குறை என்றால் தூக்கத்தை சிறிது குறைத்துக்கொள்வதில் தவறேதுமில்லை. தினமும் ஒரு மணிநேரம் நமது தூக்கத்தை குறைத்துக்கொண்டால், அது வருடத்திற்கு 365 மணிநேர பொக்கிஷமாக பயன்தரும்.
7) வாரம் மற்றும் வருட விடுமுறை நாட்களில் அதிகப்படியாக தூங்கி நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள வழியில் செலவிடுங்கள். அதற்கென முன்னதாகவே திட்டமிடுங்கள்.
8) கல்வி, செய்தி ஊடகம், சமுதாயபணி இவைகளுக்காக 4 மணிநேரமும், உபரியான வணக்கங்கள் 1 மணி நேரமும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கு 1 மணிநேரமும் என இவற்றிற்காக தினமும் 6 மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று நமக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்வது நல்லது.

இறுதியும் மரணமும் இங்கே, நமக்கு பயன்படாத நேரம் எங்கே?
நமது அனைவரின் இறுதி இலக்கு மறுமையில் வெற்றி பெருவதே என இருக்கும்போது நல்லமல்கள் செய்ய நேரமில்லை நேரமில்லை என்கிறோம். சரி எப்பொழுதுதான் நமக்கு நேரம் கிடைக்கும் என்றாவது யோசித்து பார்த்தோமா?. ஆனால் இறுதி நேரமும் மரணமும் அருகிலிருப்பதாக இறைமறை கூறுகிறது..

தங்களால் உணர முடியாத நிலையில் திடீரென இவர்களுக்கு இவ்(விறுதி) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா? அல்குர்ஆன் 43:66, 47:18

இவ்வசனங்கள் மூலம் உலக முடிவு வெகு அருகில் இருப்பதை அறிய முடிகிறது. ஒட்டு மொத்த உலக முடிவே மிக அருகிலிருக்கிறது என்றால், நம் ஒவ்வொருவரின் முடிவும் (மரணமும்) எதிர்பாராத நிலையில் திடீரென தாக்கும் என்பதை விளங்கலாம்.

உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிடும் போது "மந்திரிப்பவன்(தடுப்பவன்) யார்?" எனக் கூறப்படும். (அல்குர்ஆன் 75:26,27)

அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், வானவர்கள் அவர்களது உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், "நாங்கள் எவ்வித தீமையும் செய்யவில்லையே" என (பணிந்து வானவர்களிடம்) சமாதானம் கோருவார்கள். "அவ்வாறில்லை நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிவான்" (எனக் கூறப்படும்) அல்குர்ஆன் 16:28

வாய்ப்பளிக்கப்படாத நேரம் வரும் முன்னர்
எனவே நமது தவணை முடிந்துவிட்டால் அதனை யாராலும் பிற்படுத்த முடியாது. செய்துகொண்டிருந்த தவறான விஷயத்தில் எந்த சமாதானமும் கூற இயலாது. அப்பொழுது அநியாயக்காரர்கள் கூறுவார்களாம்:

எங்கள் இரட்சகா! எங்களுக்கு சற்றே அவகாசமளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்கிறோம்; உனது தூதர்களையும் பின்பற்றுகிறோம். என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 14:44)

இப்னு அல்-கையும்(ரஹ்) அவர்கள் கூறினார்கள், வருடம் என்பது ஒரு மரத்தைப் போலவும், மாதம் அதன் கிளைகளாகவும், நாட்கள் அதன் உபகிளைகளாகவும் நேரம் அதன் இலைகளாகவும், சுவாசம் அதன் கனிகளாகவும் இருக்கின்றது. எனவே ஒருவருடைய சுவாசங்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க இருக்குமானால் அதன் கனிகள் சுவையானதாக இருக்கும். மாற்றமாக இருக்குமானால் கனிகள் கசப்பானதாக இருக்கும். கனிகள் சுவையானதா? கசப்பானதா? என்பது அறுவடை நாளில் (மறுமையில்) நிச்சயமாக தெரிந்துவிடும்(3).

ஆகவே மரணம் வருவதற்கு முன் நல்லமல்களுக்காக நேரம் ஒதுக்கி இறைப்பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வோமாக. (ஆமீன்)

...உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்துச் செல்லுங்கள் (அல்குர்ஆன் 3:133)

__________________________________________

குறிப்புகளுக்கு உதவிய இணைய தளங்கள்:

(1) www.amrkhaled.net

(2) http://www.tamiloviam.com/writerpara/page.asp?ID=196&fldrID=4

(3) www.islaam.com

Download Unicode Font

மற்றும் பிற செய்தி தளங்கள்.
 

பிற கட்டுரைகள்